Thursday, 7 April 2011

ஓப்பன் சோர்ஸ் - விளக்கம்: புதியவர்களுக்காக ஒரு புதிய கோணத்தில்

நாம காசு கொடுத்து வாங்கிறதால மட்டும் ஒரு சாஃப்ட்வேருக்கு, சொந்தம் கொண்டாட முடியாது. ஐய்யாயிர ரூபா இருக்கிற (மதிப்பை இல்லை, விலையைத்தான் சொல்கிறேன் cost, not its value) ஒரு மென்பொருள நூறு ரூபாய்க்கு சந்தையில வாங்கினாலோ, அல்லது நாம கேட்காமலேயே சொந்த காச போட்டு வாங்குன அண்ணாச்சி நமக்கு இலவசமா கொடுத்தாலோ நாம எப்படி அதுக்கு ஓனர் ஆகமுடியும். சரி நீங்க ரொம்ப நல்லவரா, வல்லவரா, நேர்மையானவரா முழு பணத்தையும் கட்டி வாங்குனாலும் அதிலையும் ஏகப்பட்ட சட்ட சிக்கல்கள் இருக்கு. மனசாட்சிப் படி பெரும்விலை கொடுத்து வாங்கியதையே சொந்தம் கொண்டாட முடியாதபோது, நெட்ல இலவசமாத்தானே கிடைக்குது, நாம என்ன திருடினோமா? தானா வர லட்சுமிய ஏன் வேணாம்னு சொல்லனும்னு கேட்பது நியாயமா? 


அவுங்க சொன்னத (நம்மை அடிமைப் படுத்துபவர்களை) மீறுனிங்கனா ஜெயிலுக்குக் கூட போகலாம். அதுக்குன்னு ஏம்ப்பா இப்படியெல்லாம் பயமுறுத்துறன்னு கேட்குறீங்களா?


நம்மில் எத்தனை பேர் ஒரு மென்பொருள் நிறுவும் முன்னர் லைசனஸ் உடன்படிக்கையை படிக்கிறோம்?
அதிலிருக்கும் சில ஷரத்துக்கள்:
  • உங்க சிஸ்டம் நாசமாப் போனா அதற்கு நிர்வாகம் பொறுப்பல்ல
  • இந்த சாஃப்ட்வேர காப்பி பண்ணுனா மவனே நீ காலி etc..
சிலர் மிக புத்திலாசாலித் தனமாக செல்பேசியில் ஆலோசனைக் கூறும்போது கேட்டிருக்கிறேன், "இன்ஸ்டால் பண்ணனுமா? அது ஒன்னும் பெரிய விசயம் இல்லடா மாப்பிள அத அப்பூடியே டபுள் கிளிக் பண்ணு, ரெண்டாவதா ஒரு ஸ்கிரீன் வருதா அதுல அந்தப் பக்கம் இருக்கிற பட்டனை அமுக்கு. அப்பறம் ஒண்ணுமில்லடா, நீ பாட்டுல நெக்ஸ்ட் நெக்ஸ்ட்டுன்னு கண்ண மூடிட்டு அமுக்க வேண்டியதுதான்", இதுதான் இன்றைய மென்பொருள் நிறுவுதலின் உண்மை நிலை.
ஒரு மென்பொருளை நிறுவும்போது நிதானம் வேணும். ஒவ்வொரு பக்கத்திலிருக்கும் குறிப்புகளையும் கவனமா படித்து செயல்படனும். இல்லேன்னா கொசுவத்தி சுருள அவசர அவசரமா பிச்சி, இப்படி சல்லி சல்லியா நொறுகிட்டீங்களே-டான்னு சொல்ற மாதிரி ஆயிடும்.

இந்த லைசன்ஸ் விதிமுறைகள் கடுமையாகக் கடைபிடிக்கப் பட்டதென்றால் அப்புறம், ஒருத்தரும் அந்தப் பக்கம் (proprietary softwares) தலவச்சுப் படுக்கமாட்டோம். காசு கொடுத்து வாங்கிற மென்பொருளுங்கிறது ஓட்டல்ல சாப்பிடுற மாதிரி. நல்ல ருசியா இருக்கும், புதுமையா இருக்கும், சாப்பிட்டுட்டு பணத்தையும் கொடுத்து உடம்பக் கெடுத்துக்கனும். அதுக்குன்னு ஓட்டலிலேயே சாப்பிடக் கூடாதுன்னு அர்த்தம் இல்ல. வேற வழியில்லேன்னா சாப்பிடலாம், ஒரு மாறுதலுக்காக சாப்பிடலாம். வேலை தேடுபவர்கள் உணவகங்களிலேத்தானே சாப்பிட வேண்டி உள்ளது. நம் கல்விமுறையிலே இன்னும் இது ஆழமாக வலியுறத்தப் படவில்லை. ஓப்பன் சோர்ஸின் தாக்கம் படிக்கும் மாணவர்களிடையே பரவ ஆசிரியர்கள் கையில்தான் உள்ளது. ஓப்பன் சோர்ஸ்ல குவாலிட்டி இருக்காதுன்னு சொல்றவங்களும் இருக்கிறாங்க. அவர்கள் மன்னிப்பார்களாக, அவுங்க வீட்ல சமைக்கத் தெரியலனா எல்லாரும் வீட்டல சாப்பிடுறதே வேஸ்ட்டுன்னு சொல்லிட முடியுமா!?

சரி இப்ப ஃபிரீ சாப்ட்வேர கலாய்க்க வேணாம்மா. ஃப்ரீ சாப்ட்வேர் எல்லாம் ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர் கிடையாது. ஃபிரீ சாப்ட்வேர்னா கோயில்ல தர உண்டக் கட்டி (பிரசாதம்) மாதிரி. நல்ல ருசியா இருக்கிற புளியோதரை, நாவிணிக்கும் சர்க்கரைப் பொங்கல், மிளகு சாதம்னு பல வெரைட்டி, கோயிலுக்குத் தகுந்தமாதிரி கிடைக்கும். இதேபோல் மென்பொருளின் தரமும் அதை வெளியிடும் நிறுவனத்தையோ, தனி நபரையோ பொருத்ததுதான். அதே நேரத்தில உங்களுக்கு புளியோதரைக்கு உப்போ, பொங்கலுக்கு சர்க்கரையோ பத்தலேன்னா நம்மளாகவே சேர்த்து நமக்கு பிடிச்ச மாதிரி சாப்பிட முடியுமா? முடியாது. அப்படி மீறி செஞ்சா ( Reverse engineering, cracking) எப்படி சாமி கண்ண குத்திடுமோ, நீங்கள் விதிமுறைகளை மீறி இலவச மென்பொருட்களில் மாறுதல் பண்ணுனாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்.

அப்ப ஷேர்வேர்ன்னு சொல்றாங்களே, அதை மட்டும் விட்டு வைக்கலாமா? இதுவும் இலவசமாவே கிடைக்கும், ஆனா கிடைக்காது. நீங்க இலவசமா பயன்படுத்தலாம், ஆனா எல்லா வசதியும் கிடைக்கனும்னா பணம் கொடுத்துதான் ஆகனும். நம்மளும் வெறுங் கையோட வர மாமா, சித்தப்பாவவிட நிறைய ஆப்பிள், திராட்சை, பிஸ்கட், ஸ்வீட்ஸ்ன்னு வாங்கி வரும் அங்க்கிலத்தான விழுந்து விழுந்து கவனிப்போம், அந்தமாதிரித்தான் இந்த ஷேர்வேர் மென்பொருட்களும். 
ஓப்பன் சோர்ஸ் என்பது வீட்ல சமைக்கிற மாதிரி. உடம்புக்கு ஆரோக்கியமாகவும், சிக்கனாமாகவும் இருக்கும்.  வீட்ல ஒருபக்கம் பாட்டி வெங்காயம் நறுக்குவாங்க, அக்கா தேங்காத் துறுவ, அப்பா கடையிலிருந்து மளிகைப் பொருள் வாங்கி வந்து, அம்மா ஈஸியா சமைக்கிற மாதிரி ஓப்பன் சோர்ஸ்லையும் ஆளாளுக்கு ஒரு வேலைய விரும்பி ஏத்துகிறதால வேலையும் சீக்கிரம் முடியுது [புது வெர்ஷன்கள் வந்து கொண்டே இருக்கும், ஓப்பன் சோர்ஸில் பிழைகள் விரைவாக களையப் படுகின்றது], தரமும் நல்லா இருக்கு. 


 குடும்பத்துடன் அமர்ந்து, அன்புடன் பறிமாறி, மகிழ்ச்சியுடன் உண்பதால் வரும் ஆனந்தத்தைப் போன்றததுதான் திறமூல (அட ஓப்பன் சோர்ஸ் 
தாம்ப்பா) மென்பொருள் உருவாக்கம்.

அப்ப ஓப்பன் சோர்ஸ்ல காசே கிடையாதா, எல்லாமே ஓசியான்னு புத்திசாலித்தனமாகக் கேட்பதற்கு பாராட்டுக்கள். சிலர் கடைக்கு போகனும்னா கமிஷன் கேட்பாங்க. அவுங்ககிட்ட கெஞ்சிகிட்டுருக்காம நீங்களே போய் வாங்குனிங்கனா காசு மிச்சம். அதேமாதிரி ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேரையும், ஒரு நிறுவனம் மூலமா வாங்கினா அவர்கள் தருகிற சேவைக்குத் தகுந்தாற்போல கட்டணம் வசூலிக்கப் படும். இல்ல நானே பாத்துக்கிறன்னா பிரச்சனை இல்லை.இதுல ஏதோ ஜி.பி.எல் GPL (GNU Public License)ன்னு இருக்காமே, அப்படீன்னா என்னாதுன்னு கேட்பவர்களுக்காக. இது பெரும்பாலான ஓப்பன் சோர்ஸ் சாப்ட்வேர்களுக்கு வழங்கப்படும் லைசன்ஸ் ஆகும். இதை வாங்க நீங்கள் காசெல்லாம் கொடுக்க வேண்டாம், ஆனால் நீங்கள் இலவசமாக பெற்றுக் கொண்டதை அடுத்தவருக்கும் எந்த நிபந்தனையின்றியும் இலவசமாகவே தரவேண்டும். 


GNUவுக்கு விரிவாக்கம் GNU is Not Unix. வடிவேலுவின் திரும்பத் திரும்ப பேசுற நீ... காமெடி போல நீங்க எத்தனை தடவ GNUவ விரிவாக்கம் பண்ணுனாலும், அது சொன்னதையேத்தான் சொல்லும். இதைத்தான் ஆங்கிலத்தில் Recursive accronym என்று வழங்கப்படுகிறது. நீங்க சும்மா இருந்தீங்கனா ஒரு எட்டு sourceforge.net பக்கம் போயிட்டு வாங்க.

இருந்தாலும் இத படிக்கிற உங்களின் பொறுமையையும், சகிப்புத் தன்மையையும் நினைத்துப் பார்த்தால் புல்லரிக்கின்றது. வாழ்த்துகள்.

No comments:

Post a Comment